கோம்பாக், ஆகஸ்ட் 14 : கிழக்குக் கரை ரயில் இணைப்புச் (East Coast Rail Link - ECRL) சேவை இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளது.
2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டதைக் காட்டிலும், ஒரு மாதம் முன்னதாகவே தொடங்க சாத்தியமிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
பாதுகாப்பு அம்சங்களில் எந்தவொரு சமரசமும் செய்துக் கொள்ளாமல், அதன் சோதனை மற்றும் சான்றளிப்பு செயல்முறைகளை, குறிப்பாக 'பழுதில்லா ஓட்டம்' (Fault-free run - FFR) சோதனையை எளிமையாக்குவது மற்றும் அதன் கால அளவைக் குறைப்பது குறித்த வழிகளைப் போக்குவரத்து அமைச்சு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து செயல்முறைகளும் திட்டமிட்டபடி சுமுகமாக நடந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குப் பதிலாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ECRL சேவையைத் தொடங்க முடியும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
பொதுவாக பழுதில்லா ஓட்டச் (Fault-free run ) சோதனை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை எடுக்கும் ;
மற்ற நாடுகளின் செயல்முறைகளுடன் ஒப்பிட்டு இந்த கால அளவை எவ்வாறு பாதுகாப்பாகக் குறைக்கலாம் என்று அமைச்சு பரிசீலித்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
இம்மாதத்தில் தொடங்கும் கணினி ஒருங்கிணைப்பு சோதனை, ரயில் பாதையில் உள்ள மின்சாரம், சிக்னல் மற்றும் பிற கூறுகளுடன் ரயில்களின் ஒருங்கிணைப்பை முழுமையாகச் சோதிக்கும்.

மொத்தம் உள்ள 10 ECRL ரயில் பெட்டிகளில் 5 ஏற்கனவே மலேசியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
எஞ்சிய ரயில்கள் சீனாவில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அடுத்த சில மாதங்களில் வந்து சேரும் என்றும், இந்த 10 ரயில்களில் ஒவ்வொன்றும் 425 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
ஒரு ரயில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இயக்கப்பட்டால், ஒரு நாளைக்கு சுமார் 10,000 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

கட்டம் 1-இன் கீழ் 665 கிமீ நீளமுள்ள இந்த ECRL பாதை, கிளாந்தானின் கோத்தா பாருவை சிலாங்கூரின் கோம்பாக்குடன் இணைக்கிறது.
இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கிளாந்தான், திராங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது .
ECRL திட்டத்திற்கான பணியாளர்களைத் தயார் செய்யும் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன என்றும், சீனாவில் பயிற்சிகளை முடித்த பெரும்பாலான பணியாளர்கள் தற்போது செயல்பாட்டிற்கு முந்தைய இறுதி கட்டத் தயாரிப்பில் உள்ளனர் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் மேலும் தெரிவித்தார்.








