ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — சிலாங்கூர் மாநில அரசின் Iltizam Selangor Penyayang திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவிகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள, KitaSelangor Sepadu Application System (AKSES) எனப்படும் ஒருங்கிணைந்த இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளம் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் நேரடியாகச் சென்று மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளைக் குறைக்கப்படும்.
மேலும், உதவிகளுக்கான விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்தவும், மாநில அரசின் சேவை வழங்கும் திறனை மேம்படுத்தவும் முடியும் என சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
குறிப்பாக, இணையவழி சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் அல்லது டிஜிட்டல் வசதிகளை அணுகுவதில் வரம்புகளைக் கொண்டுள்ள பொதுமக்களுக்கு இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.
AKSES தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், பதிவு செய்யவும், உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களின் நிலையை இணையவழியில் சரிபார்க்கவும் முடியும் என்று அன்ஃபால் தெரிவித்தார்.







