ஷா ஆலம்,ஆகஸ்ட் 9: இன்று அதிகாலை கொம்பாக் பழைய சாலையின் அருகிலுள்ள கிழக்குக் கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டப் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஆற்றில் பாய்ந்ததில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கொம்பாக், பத்து 16 -இல் உள்ள ஒராங் அஸ்லி கிராமத்திற்கு அருகில் நடந்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் மாநில செயல்பாட்டு உதவி இயக்குனர் அஷ்ருல் ரீசால் அஷ்பார் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 1 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து செலயாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை 1.35 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
"முதற்கட்ட விசாரணையில், 30 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற யமஹா எல்.சி135 (Yamaha LC135) ரக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்," என்று அஷ்ருல் ரீசால் அஷ்பார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.






