ஷா ஆலாம், ஆகஸ்ட் 8 - மலேசிய பானாசோனிக் நிறுவனம் அதன் தொலைக்காட்சி தயாரிப்புப் பணிகளை நிறுத்துவதால் பாதிக்கப்படும் ஊழியர்களை சிலாங்கூர் அரசாங்கம் சந்திக்கவுள்ளது.
பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மாற்று வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, மாநில அரசு அடுத்த வாரம் அவர்களைச் சந்திக்கவிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
பாதிக்கப்படும் தொழிலாளர்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, மாநில மனிதவள, வறுமை ஒழிப்பு, பூர்வகுடி மற்றும் சிறுபான்மையினர் விவகாரக் குழுவின் தலைவர் வி. பாப்பாராயுடு, சொக்சோ-சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் இணைந்து அந்தச் சந்திப்பை நடத்துவார் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற '2026 சிலாங்கூர் மெகா ஜாப்கேர் ' வேலை வாய்ப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான ஆதரவை ஆராய்ந்து வழங்குவதற்காக பாப்பாராயுடு அடுத்த வாரம் அவர்களைச் சந்திப்பார். குறிப்பாக அவர்களின் தொழிற்சாலை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உணவுப் பொட்டலங்கள் வழங்குவது போன்ற ஆரம்பக்கட்ட உதவி நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் . அதே வேளையில் அவர்கள் இந்த மாநிலத்தில் இத்தனை ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய வாழ்க்கையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக மாற்று வேலைவாய்ப்புகளைக் கண்டறியவும் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்," என்று அமிரூடின் ஷாரி கூறினார்.
நேற்று பானாசோனிக் மலேசியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இரு தயாரிப்புகளுக்கான உற்பத்திப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாகவும், இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 400 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சொக்சோ அமைப்புடன் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பின் மூலம், வேலை இழப்பை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வமைப்பு நிதிப் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்க முடியும் என்று பாப்பாராயுடு கூறினார்.

"மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சொக்சோ ஒரு வகையான காப்பீட்டை வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு கட்டங்களாக நிதியுதவி வழங்கப்படும்.
இது வேலை தேடும் கட்டத்தில் செயல்படும். இதில் முதல் மாதத்தில் அவர்களின் சம்பளத்தில் 80 சதவீதமும், இரண்டாவது மாதத்தில் 50 சதவீதமும், அதைத் தொடர்ந்து 30 சதவீதமும் வழங்கப்படும். இது சொக்சோவின் புதிய முயற்சியாகும்.
இது குறிப்பாக வேலை நீக்கத்தை எதிர்நோக்கும் சிலாங்கூர் மக்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்று அவர் கூறினார்.







