B40 மாணவர்களுக்கான டிப்ளோமா கல்வி உபகாரச் சம்பளம்: JPA விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது

5 ஆகஸ்ட் 2026, 7:56 AM
B40 மாணவர்களுக்கான டிப்ளோமா கல்வி உபகாரச் சம்பளம்: JPA  விண்ணப்பம்   திறக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஆகஸ்ட் 5 — 2025ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு எழுதிய B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ கல்வியைத் தொடர உதவும் நோக்கில், ‘Program Dermasiswa B40’ (DB40) திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பொது சேவைத் துறை (JPA) திறந்துள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5 மணி வரை, அதிகாரப்பூர்வ JPA இணையதளமான https://penajaan.jpa.gov.my வழியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DB40 திட்டம் என்பது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதியுதவித் திட்டமாகும்.

விண்ணப்பதாரர்கள் மலேசியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதுடன், 2025ஆம் ஆண்டு SPM தேர்வை முதன்முறையாக எழுதியவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், தேர்வு ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் வயது 19-ஐத் தாண்டியிருக்கக் கூடாது. அவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நாள்பட்ட அல்லது தொற்றுநோய்களும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கு மேலாக, விண்ணப்பதாரர்களின் குடும்ப மாத வருமானம் B40 பிரிவின் கீழ் RM5,249.00 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

“மேலும், பெற்றோர் அல்லது விண்ணப்பதாரர்கள் JPA-வின் கருப்புப் பட்டியலில் (blacklist) இடம்பெற்றிருக்கக் கூடாது. அதேபோல், அவர்கள் அந்தத் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்பட்டிருக்கக் கூடாது.

தகுதியுடைய மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு JPA கேட்டுக்கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.