ஷா ஆலம், ஆகஸ்ட் 4: ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA) தனது (Program Masyarakat Prihatin 2026) திட்டம் வாயிலாகத் தகுதியான மற்றும் தேவையுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ உதவி சாதனங்களை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது.
தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்குச் சக்கர நாற்காலிகள், மூக்கு கண்ணாடிகள், நடப்பதற்கு உதவும் ஊன்றுகோல்கள் மற்றும் காற்று மெத்தைகள் (tilam angin) உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷா ஆலாம் பிரிவு 9 பகுதியைச் சேர்ந்த 73 வயது மூதாட்டியான ராஜம்மா வரதராஜ் என்பவர், முழங்கால் மூட்டுத் தேய்மானம் (bilateral osteoarthritis) காரணமாக நடப்பதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில், அவருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அந்த மூதாட்டியின் சார்பாக ஸ்ரீ மகேஸ்வர் என்பவரிடம் சக்கர நாற்காலியை ஷா ஆலம் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஷஹ்ரின் அஹமட் வழங்கினார்.
சமூகத்தில் உதவிகள் தேவைப்படும் விளிம்புநிலை மக்களைக் கைதூக்கிவிடத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க MBSA உறுதிபூண்டுள்ளது.
இதன் மூலம் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று MBSA நம்பிக்கை தெரிவித்தது.







