கோலாலம்பூர், ஆகஸ்ட் 4: வணிகம், முதலீடு, இலக்கவியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, ஹலால் தொழில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களின் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த மலேசியாவும் கம்போடியாவும் உறுதிகொண்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லை கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை பலப்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள கம்போடியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு அமைச்சருமான பிராக் சொகோன் (Prak Sokhonn), பிரதமர் அன்வாரை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்தபோது இந்த முக்கிய விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ள மலேசியா-கம்போடியா இருதரப்பு ஒத்துழைப்புக்கான மூன்றாவது இணை ஆணையக் கூட்டத்தின் (JCBC) ஒரு பகுதியாகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது," என்றும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், "இது 2027ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் கம்போடியா இடையிலான தூதரக உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஒரு முக்கியமான தளமாகவும் அமைகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும், நிலையான வியூகக் கூட்டாண்மையையும் பிரதிபலிக்கிறது," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியா-கம்போடியா இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்றும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அவற்றின் குடிமக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைத் தரக்கூடிய அதிகமான ஒத்துழைப்பு வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
- பெர்னாமா







