ஷா ஆலாம், ஆகஸ்ட் 2 : நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி தான் - எம்.தீனா, இன்று நடைபெற்ற 2026 தைவான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில், தரவரிசையில் இல்லாத ஜப்பானின் சுமிதே நகடே - மியு தகாஹாஷி ஜோடியிடம் நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
இத்தொடரின் முதன்மை தரவரிசை ஜோடியாகவும், உலக அளவில் 5-வது இடத்திலும் இருக்கும் பியர்லி-தீனா, உலக தரவரிசையில் 71-வது இடத்தில் உள்ள ஜப்பானிய ஜோடியின் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
இதன் காரணமாக, முதல் செட்டில் 16-21 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினர்.
40 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் பியர்லி-தீனா ஜோடி சிறப்பாக மீண்டு வந்து, ஆட்டத்தை தீர்க்கமான மூன்றாவது செட்டிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் 18-18 என புள்ளிகளை சமநிலைப் படுத்தியது.
இருப்பினும், நிதானமாக விளையாடிய நகடே-தகாஹாஷி ஜோடி, அடுத்தடுத்து மூன்று புள்ளிகளைப் பெற்று 21-18 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது.
"ஜப்பானிய ஜோடி எங்களைத் தாக்கி விளையாடுவதில், குறிப்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் எங்களின் தற்காப்பு ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தத் தவறை நான் கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும்," என்று உலக பூப்பந்து கூட்டமைப்பு (BWF) பகிர்ந்த ஒலிப்பதிவில் தீனா தெரிவித்திருந்தார்.
ஆரோன் சியா - ஆரோன் தாய் ஜோடிக்கும் இரண்டாவது இடம்

மறுபுறம், நாட்டின் ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா - ஆரோன் தாய், இன்று நடைபெற்ற 2026 தைவான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
இப்போட்டியில் 5-வது தரவரிசையில் களமிறங்கிய மலேசிய ஜோடி, 8-வது தரவரிசையில் உள்ள இந்தோனேசியாவின் லியோ ரோலி கர்னாண்டோ - டேனியல் மார்தின் ஜோடியிடம் 21-23, 19-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது.
42 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டில், இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், இந்தோனேசிய ஜோடி கூடுதல் புள்ளி (deuce) முறையில் செட்டைக் கைப்பற்றியது.
இரண்டாவது செட்டிலும் சியா-தாய் ஜோடி தொடர்ந்து கடுமையான சவாலை அளித்தனர். ஆனால், இறுதிவரை நிதானத்தைக் கடைப்பிடித்த இந்தோனேசிய ஜோடி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
கடந்த மாதம் முதல் முறையாக ஒன்றிணைந்து விளையாடத் தொடங்கிய இந்த மலேசிய ஆடவர் இரட்டையர் ஜோடி, இறுதிப்போட்டி வரை முன்னேறியது இதுவே முதல் முறையாகும்.





