ஷா ஆலாம், ஆகஸ்ட் 1 — உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியர் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் 999 அவசர உதவி எண் மூலமாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைத் தலைவர் கண்காணிப்பாளர் எம். மணிமாறன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் சிகிச்சைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், எனினும் அவர் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"கிடைத்த தகவலின் அடிப்படையில், குழுவினர் நேற்று காலை சுமார் 8.20 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"முதற்கட்ட விசாரணையின்படி, அப்பள்ளியின் முதல் மாடியில் அமைந்துள்ள ஆசிரியர் அறையில் பாதிக்கப்பட்டவர் கண்டெடுக்கப்பட்டார்," என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறையில் நேற்று மாலை 5.30 மணிக்கு மரணமடைந்தவரின் உடலின் பிரேதப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது உலு சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







