'பிங்காஸ் 3.0' உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் திறக்கப்படும்

31 ஜூலை 2026, 5:11 AM
'பிங்காஸ் 3.0' உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் திறக்கப்படும்

ஷா ஆலாம், ஜூலை 31 - சிலாங்கூர் மக்களின் நலனைக் காக்கும் 'பிங்காஸ் 3.0' உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ள மாநில அரசாங்கம், இதன் மூலம் சுமார் 30,000 பேர் பயனடைவார்கள் என இலக்கு கொண்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் திறக்கப்படவிருந்த இந்த விண்ணப்பம், மாநிலத்தின் பிற நலத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஒத்திவைக்கப்பட்டதாக மாநில நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு முந்தைய காலங்களைப் போலவே பொதுமக்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் விவரங்கள் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த முறை முந்தைய கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறிய கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் தேவைப்படுவோருக்கு உதவும் பிங்காஸ் திட்டத்தின் அடிப்படை நோக்கம் மாறாமல் தொடரும் என்றார்.

ஒவ்வொரு மாதமும் பயனாளர்களுக்கு வழங்கப்படும் RM300 நிதி, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவும் என நம்புவதாகவும் அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மாதாந்திர வருமானம் RM5,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஏற்கனவே உதவி பெற்று வருபவர்களும் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அன்ஃபால் சாரி தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு விண்ணப்பமும் தற்போதைய தகுதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றார்.

இந்த திட்டம் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் செல்கேர் அல்லது அன்ஃபால் சாரியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கங்கள் வழியாக மட்டுமே வெளியிடப்படும் என்பதால், அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தரப்பிடமும் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.