ஷா ஆலாம், ஜூலை 30 - பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கோயில் விவகாரம் குறித்த தனது வார்த்தைப் பிரயோகத்தால் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட மனவருத்தத்திற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதில் அவர் வெளிப்படுத்திய பணிவைத் தாம் பாராட்டுவதாக, மனிதவள, வறுமை ஒழிப்புக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தெரிவித்தார்.
தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரும் தைரியம் பலவீனத்தின் அடையாளம் அல்ல. மாறாக, அது பணிவுள்ள, தனது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் ஒரு தலைவரின் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
அவர் சரியாகச் சுட்டிக்காட்டியபடி, பிரதமரும் ஒரு மனிதர்தான்; அவரும் தவறு செய்யக்கூடியவராகவும் இருக்க முடியும். உண்மையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தத் தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையும், திருத்தங்களைச் செய்வதும், அனைத்து மலேசியர்களின் உணர்வுகளையும் பன்முகத்தன்மையையும் தொடர்ந்து மதிப்பதுமாகுமென பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பராய்டு குறிப்பிட்டார்.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் அனைத்து சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களை மதிப்பதற்கும் அரசாங்கத்தின் கடப்பாடு, நோக்கமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அல்லாமல், அதன் செயல்கள் மற்றும் சாதனைப் பதிவுகளின் அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டுமென, தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் பாப்பராய்டு அவ்வாறு குறிப்பிட்டார்.







