ஜோகூர் பாரு, ஜூலை 29 - 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது 18 மாத மகனை கொலை செய்ததாக 40 வயது ஜி.தெவெந்திரன் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கொலை குற்றச்சாட்டு உயர் நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி காலை மணி 8.30-இல் இருந்து காலை மணி 10 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், மாசாய் பண்டார் பாரு பெர்மாஸ் ஜயா, ஜாலான் பெர்மாஸ் செலாத்தான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகன் தேஷ்வரை கொலை செய்தததாக, தெவெந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தெவெந்திரன் மீது தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அச்சட்டம் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளில் இருந்து 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படி விதிக்க வகை செய்கிறது.
மரபணு, நோயியல், தடயவியல் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக, உத்தரவாதத்தில் விடுவிக்கப்படாத தெவெந்திரன் மீதான இந்த வழக்கு அக்டோபர் முதலாம் தேதி செவிமடுக்கப்படும்.
மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தனது கைபேசியில் ஒழுங்கீனமற்ற படங்களையும், காணொளிகளையும் வைத்திருந்தததாக தெவெந்திரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அந்த குற்றத்திற்காக தெவெந்திரனுக்கு ஒரு மாத சிறையும், 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
2023 -ஆம் ஆண்டு செப்டம்பர் 13 -ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுவன் சுயவினைவற்ற நிலையில் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு அச்சிறுவன் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது.







