கிளாஸ்கோ, ஜூலை 28 - நாட்டின் பளுதூக்கும் வீரர் எர்ரி ஹிடாயத் (Erry Hidayat), கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 79 கிலோ எடைப்பிரிவில் மலேசியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் எர்ரி தனது முதல் காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2022 பர்மிங்காம் போட்டியில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 வயதான எர்ரி, மொத்தம் 331 கிலோ எடையைத் (ஸ்நாட்ச் பிரிவில் 147 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 184 கிலோ) தூக்கி தனது வெற்றியை உறுதிச் செய்தார்.
இவரது கிளீன் அண்ட் ஜெர்க் சாதனை மற்றும் ஒட்டுமொத்த மொத்த எடை ஆகியவை புதிய காமன்வெல்த் போட்டி சாதனைகளாகவும் பதிவாகின.
இந்தியாவின் வல்லூரி அஜய் பாபு மொத்தம் 330 கிலோ (ஸ்நாட்ச் 149 கிலோ; கிளீன் அண்ட் ஜெர்க் 181 கிலோ) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அதே நேரத்தில் இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே மொத்தம் 325 கிலோ (ஸ்நாட்ச் 148 கிலோ; கிளீன் அண்ட் ஜெர்க் 177 கிலோ) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
கோலாலம்பூர் 1998 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தனது தந்தை ஹிடாயத் ஹமிடோனின் வழியைப் பின்பற்றி எர்ரி இந்த வெற்றியைப் பெற்றிருப்பதை அடுத்து இச்சாதனை மேலும் கூடுதல் அர்த்தமுள்ளதாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற போட்டிகளில் அவரது சக வீரர்கள் அனிக் கஸ்தான் (60 கிலோ பிரிவு) மற்றும் அஸ்னில் பிடின் (65 கிலோ பிரிவு) ஆகியோர் முறையே தங்கம் வென்றதைத் தொடர்ந்து, எர்ரி மலேசியாவின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை மலேசியாவிற்குப் பெற்றுத் தந்துள்ளார்.








