கிளாஸ்கோ, ஜூலை 27: மலேசியாவின் முன்னணி பளுதூக்கும் வீரரான மொஹமட் அனிக் காஸ்டான், ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப்பிரிவில் முதலிடம் பிடித்து, கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டியில் மலேசியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
முகமது அனிக், ஸ்நாட்ச் (snatch) பிரிவில் 121 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் (clean and jerk) பிரிவில் 152 கிலோ என மொத்தம் 273 கிலோ எடையைத் தூக்கி வெற்றியாளராக வாகை சூடிய வேளை, காமன்வெல்த் போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்தார்.
அவர் மொத்தம் 264 கிலோ எடையைத் தூக்கிய இந்தியாவின் ரிஷிகாந்தா சிங் சனம்பமையும், 260 கிலோ எடையைத் தூக்கிய கென்யாவின் ஜோசுவா அமுங்கா எம்போயாவையும் (வெண்கலம்) பின்னுக்குத் தள்ளி இந்த வெற்றியைப் பெற்றார்.
முகமது அனிக் ஏற்கனவே 2022 -ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 249 கிலோ (ஸ்நாட்ச் பிரிவில் 107 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 142 கிலோ) தூக்கி தங்கம் வென்றதோடு சாதனையையும் படைத்தார்.
இம்முறை மீண்டும் புதிய சாதனையோடு தனது அப்பிரிவின் நடப்பு வெற்றியாளருக்கான தகுதியை அவர் நிலைநிறுத்திக் கொண்டார்.







