கோலாலம்பூர்: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் நாட்டின் பாராலிம்பிக் வீர்ர் போனி புன்யாவ் கஸ்டின் வெண்கலப் பதக்கம் வென்று, மலேசியாவிற்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
போனி தனது சிறந்த முயற்சியாக 220 கிலோ எடையைத் தூக்கி 153.5 புள்ளிகளைப் பெற்றார்.
இவரை விட இங்கிலாந்தின் ஸ்வான் 222 கிலோ எடையைத் தூக்கி 153.9 புள்ளிகளுடனும் முதல் இடத்தையும், நைஜீரியாவின் ரோலண்ட் எசுரூயிகே 185 கிலோ எடையைத் தூக்கி 153.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
முன்னதாக, போனி தனது இறுதி முயற்சியில் 230 கிலோ எடையைத் தூக்க முயன்று தோல்வியடைந்தார்.
இந்த முடிவின் மூலம், சரவாக்கைச் சேர்ந்த 27 வயதான நான்கு முறை உலக வெற்றியாளரான போனி, கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறினார்.
பர்மிங்காமில் அவர் 220 கிலோ எடையைத் தூக்கி 154.6 புள்ளிகளுடன் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 6 ஒருங்கிணைந்த பாரா விளையாட்டுகள் உட்பட மொத்தம் 10 விளையாட்டுகளில் பங்கேற்கும் மலேசியா, 8 விளையாட்டுகளின் மூலம் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 11 பதக்கங்களை வெல்ல இலக்குக் கொண்டுள்ளது.







