ஈப்போ, ஜூலை 27 - தெலுக் இந்தான், ஜாலான் பாடாங் தெம்பாக் பகுதியில் இரண்டு இளம் பெண்கள் உயிரைப் பறித்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ஹிலிர் பேராக் மாவட்டத்தின் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் சுவா கொக் லியான் அவர்களின் தகவலின்படி, கைது செய்யப்பட்டுள்ள 28 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் 'பென்சோடியாசெபைன்' (Benzodiazepine) வகையைச் சேர்ந்த போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர், தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 44(1)(a) மற்றும் பிரிவு 44(1A)(a) ஆகியவற்றின் கீழும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றத்திற்காக 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டப் பிரிவு 12(2) இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை சுமார் 6.35 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் ஓட்டிச் சென்ற கார் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மற்றொரு கார் மற்றும் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த ஏழு வயது சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு தெலுக் இந்தான் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகளைக் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.







