கோலாலம்பூர், ஜூலை 26 : பஹாங், பெந்தோங்கில், பழைய காராக் சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
அந்தத் துயரச் சம்பவத்தால் தாமும் தமது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக, அவர் இன்று 'X' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
"விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியையும் மனவலிமையையும் அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும்.
மேலும், காயமடைந்தவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
சாலைப் பாதுகாப்பை நாம் ஒருபோதும் சாதாரணமாக அல்லது அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை இந்தத் துயரச் சம்பவம் நம் அனைவருக்கும் நினைவூட்டியிருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில், ஆறு இளைஞர்கள் பயணித்த கார், தெமர்லோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு டன் எடை கொண்ட லாரியுடன் மோதியது.
அதில் காரில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் காரை ஓட்டிய வி. முகிலன் (25) மற்றும் காரில் பயணித்த கே. தினேஷ்வரன் (22), கே. அழகநாதன் (21), ஏ. கணபதி ராஜா (19), எஸ். கீஸ்வன் (17), எம். பரந்தாமன் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். லாரியை ஓட்டி வந்த 31 வயது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.







