சிலாங்கூரில் குறைந்த விலை வீடுகளின் பராமரிப்புக்கு 21.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

24 ஜூலை 2026, 6:42 AM
சிலாங்கூரில் குறைந்த விலை வீடுகளின் பராமரிப்புக்கு  21.5 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு

ஷா ஆலாம், ஜூலை 24 — சிலாங்கூரில் உள்ள குறைந்த விலை வீடுகளைப் பராமரிப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும், 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் 21.5 மில்லியன் ரிங்கிட் நிதியை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) ஒதுக்கியுள்ளது.

இதில் மின்தூக்கிகள் (Lifts), கூரைகள் மற்றும் மின்சார அமைப்புகள் போன்ற அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 10.05 மில்லியன் ரிங்கிட்டும், நடப்பு ஆண்டில் 11.45 மில்லியன் ரிங்கிட்டும் இந்த வீட்டுவசதி பராமரிப்புத் திட்டத்தின் (PPP) கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

தேசிய வீட்டுவசதித் துறையின் மூலம் குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதில் அமைச்சு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மேலவையில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அவர் குறிப்பிட்டடார்.

சிலாங்கூரில் மக்கள் அதிகம் கொண்ட குறைந்த வருமானத்தினருக்கான அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், மின்தூக்கிகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் சிறப்பு உதவிகள் குறித்து செனட்டர் தியூ வே கெங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

மக்கள் வீட்டுவசதித் திட்டம் (PPR) மற்றும் குறைந்த செலவு அடுக்குமாடி வீடுகளின் பராமரிப்புக்கு இந்த நிதி ஆதரவளிக்கிறது. இதில் மின்தூக்கிகள், நீர் தொட்டிகள், கூரைகள், மின்சார வயரிங், படிக்கட்டுகள் மற்றும் வெளிப்புறக் சுவர்கள் உட்பட 10 முக்கியப் பராமரிப்புப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நிதிப் பற்றாக்குறை காரணமாக, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பில் அதிக தாக்கம் செலுத்தும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நிதி ஒப்புதல் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் பழமையான குடியிருப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 12-ஆவது மலேசியத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இந்த பராமரிப்புத் திட்டத்திற்காக 159.1 மில்லியன் ரிங்கிட்டை அமைச்சு செலவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 2026-ஆம் ஆண்டிற்கு 44.6 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.