ஷா ஆலம், ஜூன் 10 – சிலாங்கூர், பத்தாங் காலி பொதுச் சந்தை, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (KPKT) 319,600.49 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேம்படுத்தப்பட்டு, தற்போது முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
வியாபாரிகளுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்குத் தூய்மையான மற்றும் வசதியான வணிகச் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த பத்தாங் காலி பொதுச் சந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் வழி சந்தைக்கு ஒரு புத்துயிர் கிடைத்துள்ளது என்பதோடு அதன் தூய்மை, வசதி மற்றும் வணிக இடத்தைப் பயன்படுத்தும் திறன் ஆகியவை பெருமளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சு தமது முகநூல் பதிவின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றமானது அங்கு ஏற்கனவே இருந்த வசதிகளை மேம்படுத்தியது மட்டுமன்றி, அந்த வட்டார மக்களின் வாழ்வாதாரத்தையும், சமூகப் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்கும் அந்தப் பொதுச் சந்தையின் செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இத்தகைய தொடர் முயற்சிகள், தற்போதைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் முறையான மற்றும் பயனர்-நட்புச் சூழலை உருவாக்கப் பெரிதும் துணைபுரியும் என்றும் கேபிகேடி குறிப்பிட்டுள்ளது.
மலேசியா மடாணி (Malaysia MADANI) தொலைநோக்குச் சிந்தனைக்கு ஏற்ப, உள்ளூர் சமூகத்தின் நல்வாழ்விற்கும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடிப் பலன்களைத் தரக்கூடிய மக்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் ஆணித்தரமாகக் கூறப்பட்டுள்ளது.







