புத்ராஜெயா, ஜூன் 7: உள்ளூராட்சி மன்றங்களின் (PBT) கீழ் வணிக உரிமங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்கும் ஒரு நிபந்தனையாக, வணிக வளாகங்களில் மறுசுழற்சி வசதிகளை (FPS) அமைப்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இது இந்த மாதம் முதல் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (KPKT) அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
"இந்த அமலாக்கம், வணிக வளாக உரிமையாளர்களைத் தன்னார்வமாக இதில் ஈடுபட ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, இந்த அமலாக்கத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
"அதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வணிக வளாகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர், இது கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் திடக்கழிவு நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பொதுமக்கள் மறுசுழற்சி வசதிகளை எளிதாக அணுகவும், மேலும் நிலையான சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கி விரைவாக நகரவும் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு முக்கிய உத்தியே இந்த முடிவு என KPKT தெரிவித்துள்ளது.
மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அளவில் இதன் அமலாக்கம் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்த முன்மொழிவு தேசிய உள்ளூராட்சி மன்றத்தின் (MNKT) பரிசீலனைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் KPKT கூறியது.
"மலேசியா தினமும் 39,000 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகளை உருவாக்குவதால் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நாட்டின் மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்கவும், உற்பத்தியாளர் பொறுப்பு விரிவாக்க (EPR) திட்டத்தை ஆதரிக்கவும், குப்பைக் கிடங்குகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு விரிவான அணுகுமுறை தேவை," என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
இதற்கிடையில், சமூகத்தினரிடையே மறுசுழற்சி கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மடாணி அரசாங்கத்தின் (Kerajaan MADANI) கடப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என்று வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் நிகா கோர் மிங் (Nga Kor Ming) அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
"பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாகங்களும் ஒன்றாகும். இந்த முக்கியமான இடங்களில் மறுசுழற்சி வசதிகளை உருவாக்குவதன் மூலம், மக்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பிரித்து, பொறுப்புடன் வழங்குவதற்கான எளிதான வாய்ப்பு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை நாட்டின் மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்கவும் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் குறித்து அதிக அக்கறை கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும், மேலும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்குமான நீண்டகால முதலீடாகவும் அமையும் என்று நிகா குறிப்பிட்டார்.
மேலும், எளிதில் அணுகக்கூடிய வசதிகளை ஏற்படுத்துதல், மறுசுழற்சி பொருட்களைச் சேகரிக்கும் விகிதத்தை அதிகரித்தல் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் தொடர்பான தரவு நிர்வாகத்தை மிகவும் முறையாக வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த திட்டம் சமூகம், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மறுசுழற்சி விகித இலக்கை ஆதரிப்பதைத் தவிர, FPS-ஐ உருவாக்குவது நகர்ப்புற திடக்கழிவு நிர்வாகத்தை வலுப்படுத்தவும், MURNInets அமைப்பின் கீழ் நகர்ப்புற நிலைத்தன்மை மதிப்பீட்டை (skor kemampanan bandar) அதிகரிக்கவும் உதவும்.
வழங்கப்பட்டுள்ள வசதிகளுக்கு மறுசுழற்சி பொருட்களை அனுப்புவதன் மூலம் 'குப்பையிலிருந்து பணம்' (trash to cash) திட்டத்தின் வழி பொதுமக்கள் பொருளாதார மதிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மாநில அரசாங்கங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனகளுடன் KPKT நெருக்கமாகப் பணியாற்றி, தெளிவான மற்றும் சீரான வழிகாட்டுதல்களை வழங்கும்.
மலேசியா மடானி தொலைநோக்குச் சிந்தனை மற்றும் நாட்டின் நிலையான மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான மலேசியாவை உருவாக்குவதற்கு, மாநில அரசுகள், உள்ளூராட்சி மன்றங்கள், வணிக வளாக உரிமையாளர்கள், தனியார் துறை மற்றும் சமூகம் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த முயற்சி வெற்றிபெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என KPKT கேட்டுக்கொண்டுள்ளது.
வணிக வளாகங்களில் மறுசுழற்சி வசதிகள் இந்த மாதம் முதல் கட்டாயம்: கேபிகேடி (KPKT) அறிவிப்பு
7 ஜூன் 2026, 3:43 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அமைச்சரவை பரிசீலனை
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
11 ஜூன் 2026

selangor
3 லட்சம் ரிங்கிட் செலவில் பத்தாங் காலி பொதுச் சந்தை புதுப்பொலிவு பெற்றது
Shalini Rajamogun
10 ஜூன் 2026

selangor
தீக்கிரையான உணவுக் கடைகளை அகற்றி புதிய நவீனக் கடைகள் அமைக்க எம்பிபிஜே திட்டம்
Shalini Rajamogun
27 மே 2026

national
மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளில் KPKT தீவிரம்: இந்த ஆண்டு 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவு
Pakiya
14 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



