ஷா ஆலம், ஜூன் 11: நாட்டின் தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், 2013-ஆம் ஆண்டு அடுக்குமாடி நிர்வாகச் சட்டம் (சட்டம் 757) மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சு (KPKT) தற்போது விரிவாக மறுஆய்வு செய்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் தொடர்பான இந்தச் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டே அரசிதழில் வெளியிடப்பட்டது என அதன் அமைச்சர் டத்தோ அய்மான் அதீரா சாபு சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிவேக மற்றும் மாறும் தன்மையிலான வளர்ச்சி மற்றும் மக்களின் அனுபவங்களின் அடிப்படையில் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று விவரித்தார்.
இன்று நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மீடியா சிலாங்கூரிடம் பேசியபோது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது இச்சட்டம் மறுஆய்வு செய்யும் கட்டத்தில் மட்டுமே உள்ளது என்றும், தேசிய வீட்டுவசதி துறைக்கும் குறிப்பாக தங்களது அமைச்சுக்கும் இந்தச் சட்டத் திருத்த முயற்சியில் வேறு என்னென்ன அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்குவதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் அதே வேளையில் நிலப்பரப்பு மிகவும் குறைவாக உள்ளதால், மலேசியா தற்போது அடுக்குமாடி குடியிருப்பு முறையை நோக்கியே அதிகமாக நகர்ந்து வருவதாகவும், இதனால் இந்தச் சட்டத்திருத்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இங்குள்ள டபுள் ட்ரீ பை ஹில்டன் (Double Tree by Hilton) ஹோட்டலில் நடைபெற்ற '2026-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மாநாடு: முதல் தர அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை நோக்கி' என்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு (Allowance) வழங்கும் முறையில் நிலவும் சமச்சீரற்ற மதிப்பீட்டு அளவுகோல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, கட்டிடக் ஆணையம் (Buildings Commission) தற்போது அது தொடர்பான விதிகளையும் மறுஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தரநிலை செயல்பாட்டு நடைமுறையானது (SOP), நியாயமற்ற கொடுப்பனவு விகிதங்களால் கட்டிடப் பராமரிப்பு நிதிகள் குறைந்துவிடும் அபாயத்தைத் தடுக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறையின் மூலம், அடுக்குமாடி குடியிருப்புகளின் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வரும் புகார்கள் பெருமளவு குறைக்கப்படும் என்றும், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் நிர்வாகம் நிலையானதாகவும் நேர்மையுடனும் நீடிப்பதை இது உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோலா சிலாங்கூர் நகராண்மைக்கழகம் (MPKS) ஏற்பாடு செய்திருந்த இந்த '2026 அடுக்குமாடி குடியிருப்பு மாநாட்டில்' கொள்கை வகுப்பாளர்கள், அரசு முகமைகள், உள்ளாட்சி அமைப்புகள், தொழில்துறையினர், சொத்து மேம்பாட்டாளர்கள், கூட்டு மேலாண்மை அமைப்புகள் (JMB), மேலாண்மைக் கழகங்கள் (MC), மேலாண்மை முகவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் என சுமார் 130 பேர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில், மிகவும் சிறந்த, நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாக முறையை அடைவதற்காக, தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் திசைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.







