ரொம்பின் – கடந்த சனிக்கிழமை பகாங், ரொம்பினில் கோஸ்மா தோட்டத்தின் பிரதான சாலையில் நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இந்தோனேசியத் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்த 24 வயதுடைய ஹெந்திரவான் (Hendrawan) என்ற அந்த நபர், குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், டொயோட்டா ரக லாரியை ஓட்டுநர் உரிமம் இல்லாத 15 வயது சிறுவன் ஓட்டியதும், அவனுடன் 17 வயது சிறுவன் ஒருவன் பயணித்ததும் தெரியவந்துள்ளது என ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பரிண்டெண்டன் ஷரீஃப் ஷாய் ஷரீஃப் மன்டோய் தெரிவித்தார்.
சம்பவத்தன்று, மாலை 5.45 மணியளவில், கோஸ்மா ஆலை குடியிருப்புப் பகுதியிலிருந்து கோஸ்மா தோட்ட கட்டுமானப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது.
"சம்பவ இடத்திற்கு வந்ததும், அந்த லாரி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த 24 வயதுடைய மற்றொரு நபர், உடனடியாக தப்பித்துக்கொண்டதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார் என ஷரீஃப் ஷாய்இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
லாரி ஓட்டிய சிறுவனுக்கு வலது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவனுடன் பயணித்த சிறுவனுக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாகனத்தை ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தவறியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.







