ஷா ஆலம், ஜூலை 17: இன்று அதிகாலை சுங்கை பெசார், கம்பாங் தெபுக் மார்சோ (Kampung Tebuk Marso) அருகே உள்ள ஜாலான் பெசாரில் இரு டிரெய்லர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு டிரெய்லர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவத்தில், அவருடன் அதே வாகனத்தில் பயணித்த ஏழு மாத கர்ப்பிணியான அவரது மனைவி காயமடைந்தார்.
அதிகாலை 2.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்து சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனத்துடன் ஆறு பணியாளர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், 36 டன் எடை கொண்ட இரும்புச் சுமைகளை ஏற்றிச் சென்ற ஹினோ (Hino) டிரெய்லரும், கன்டெய்னர் ஏற்றிச் சென்ற வோல்வோ (Volvo) டிரெய்லரும் இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
வோல்வோ டிரெய்லரில் பயணித்த ஓட்டுநரின் மனைவியான 26 வயது பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவரை மீட்டனர்.
இருப்பினும், வோல்வோ டிரெய்லரின் ஓட்டுநரான 21 வயது இளைஞர், சுயநினைவற்ற நிலையில் ஓட்டுநர் இருக்கையில் சிக்குண்டார்.
ஹினோ டிரெய்லரின் ஓட்டுநர் இந்த விபத்தில் எந்தக் காயமும் இன்றி தப்பியதாக அஷ்ருல் ரிசால் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வோல்வோ டிரெய்லர் ஓட்டுநர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. ‘
அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று அஷ்ருல் ரிசால் கூறினார்.








