தானா மேரா, ஜூலை 21 — இன்று அதிகாலை கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் லாரியும் டிரெய்லரும் மோதிக்கொண்ட கோர விபத்தில் மூன்று ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை 4.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஐந்து டன் லாரியின் ஓட்டுநரான நூர்அஸீமான் அப்துல் அஸீஸ் (42), மற்றும் அவருடன் பயணித்த கிளீனர்களான முகமட் ஹைக்கால் ஹனிஃபா (29), முகமட் சக்வான் முகமட் நோர் (16) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாலை 4.26 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக நடவடிக்கைக் தளபதி மாட் நூரி முகமட் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உட்பட 12 தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சென்றதும் கோழிகள் ஏற்றிச் சென்ற ஐந்து டன் எடையுள்ள லாரி ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது மோதியிருப்பது தெரியவந்தது.
"இந்த விபத்தில் லாரியில் இருந்த மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் அவர்கள் மீட்கப்பட்டனர்.
இருப்பினும், அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதைச் சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். பின்னர், மேல் நடவடிக்கைக்காக அவர்களின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.







