ஷா ஆலம், மார்ச் 5 - கிள்ளான், மேரு காவல்நிலையத்தில் சண்டையில் ஈடுபட்ட 5 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கிள்ளான், மேருவில் இரவு 9.40 மணியளவில், புகாரளிப்பதற்காகக் காவல்நிலையத்திற்கு 3 ஆடவர்கள் வந்தபோது, இந்த சம்பவம் நடந்தது என்று வட கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
5 ஆடவர்கள் கொண்ட கும்பல் ஒன்று திடீரென காவல்நிலையத்திற்குள் நுழைந்து, இரு தரப்புக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டி சேதமடைந்தது. பின்னர் சந்தேக நபர்கள் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டனர் என தெரிவிக்கப்பட்டது.
28 முதல் 41 வயதிலான அந்த ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








