வாஷிங்டன், ஜூலை 8 : லியோனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால், எகிப்துக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக, இப்போட்டியில் யாசர் இப்ராஹிம் மற்றும் முஸ்தபா ஜிகோ ஆகியோரின் கோல்களால் எகிப்து அணி வரலாற்று வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது, ரசிகர்களுக்கு ஒருபுறம் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும்,நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினா ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்களில் (கூடுதல் நேரம் உட்பட) அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து தங்களின் பலத்தை நிரூபித்தது.
ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.
இந்த கோல் மூலம் அவர் நடப்புத் தொடரில் 8 கோல்களுடன் தங்கக் காலணிக்கான போட்டியில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில், லாடாரோ மார்டினெஸ் தட்டிக் கொடுத்த பந்தை என்ஸோ பெர்னாண்டஸ் கோலாக மாற்றி அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக, எகிப்து அணி ஆட்டத்தின் பெரும்பாதியை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்ததன் மூலம், தங்களது நாட்டு காற்பந்து வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற முயன்றது.
எகிப்து கோல்கீப்பர் ஷோபீர் முதல் பாதியில் மெஸ்ஸியின் பெனால்டியை தடுத்ததோடு, பல முக்கிய கோல் வாய்ப்புகளையும் முறியடித்தார். பிற்பாதியின் தொடக்கத்தில் எகிப்து அடித்த ஒரு கோல், விஏஆர் (VAR) பரிசீலனைக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது எகிப்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தது.
அர்ஜென்டினாவின் வெற்றி கோலுக்குப் பிறகு, எகிப்து அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டம் இறுதியில் அர்ஜென்டினாவிற்கு சாதகமாக முடிய மெஸ்ஸி, சக வீரர்களைக் கட்டிப்பிடித்து வெற்றியைக் கொண்டாடினார்.
காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, கொலம்பியா அல்லது சுவிட்சர்லாந்து அணியை சனிக்கிழமை எதிர்கொள்ளும்.






