ஷா ஆலாம், நவ 10- கம்போங் ஜாவா, லோட் 11113-இல் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகளை ஒத்திவைக்கச் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வீடுகளைக் காலி செய்ய இரண்டு வாரங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
'ஸ்மார்ட்சேவா' திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளுக்கு மக்கள் இடம்பெயர வசதியாகவே இந்த ஒத்திவைப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் சில குடியிருப்பாளர்கள் மூத்த குடிமக்கள் என்பதாலும், தங்கள் உடைமைகளை முழுமையாகப் புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும் குடியேறும் செயல்முறைகளை முடிப்பதற்கும் கூடுதல் நேரம் தேவை என்பதாலும், இந்தக் கோரிக்கையை மாநில அரசு கருத்தில் எடுத்துள்ளது.
இந்த ஒத்திவைப்பு மற்றும் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம், சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் கலாச்சாரத் துறை செயற்குழு உறுப்பினர் டத்தோ' போர்ஹான் அமான் ஷாவிடமிருந்து வெளியிடப்பட்டுள்ளது என்றும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக அது கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மிகவும் தேவைப்படும் மக்களுக்கு வசதியான வீடுகளை வழங்கியதற்காகவும், இந்த விண்ணப்பத்தைக் கருத்தில் கொண்டதற்காகவும் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் செயற்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா ஆகியோருக்குக் குடியிருப்பாளர்கள் சார்பில் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.




