கோலாலம்பூர், ஜூலை 11 - மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சனிக்கிழமையன்று பாவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, இன்றும் நாளையும் ( 11 முதல் 12 ஜூலை 2026) வரையிலான கோலாலம்பூர்-ஷாங்காய் வழித்தடத்திற்கான கூடுதல் விமானப் பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட கோலாலம்பூர்-தைபே வழித்தட விமான ரத்துகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விமான நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 11 அன்று பாதிக்கப்பட்ட விமானங்கள் MH386 (கோலாலம்பூர்-ஷாங்காய்), MH388 (கோலாலம்பூர்-ஷாங்காய்) மற்றும் MH389 (ஷாங்காய்-கோலாலம்பூர்) ஆகும்.
ஜூலை 12 அன்று திட்டமிடப்பட்டிருந்த MH387 (ஷாங்காய்-கோலாலம்பூர்) விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று, மலேசியா ஏர்லைன்ஸ் பாவி சூறாவளி காரணமாக இன்று திட்டமிடப்பட்டிருந்த MH366 (கோலாலம்பூர்-தைபே) மற்றும் MH367 (தைபே-கோலாலம்பூர்) ஆகிய விமானங்களின் ரத்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
விமான நிறுவனம் தற்போதைய நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப விமானச் செயல்பாடுகள் குறித்த சமீபத்திய தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிப்புகளைப் பெறுவதை உறுதி செய்ய, பயணிகள் தங்களின் தொடர்பு விபரங்களை இணையதளம் அல்லது மொபைல் செயலியின் "My Booking" பிரிவில் புதுப்பிக்குமாறு மலேசியா ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அசல் பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் "My Booking", AskMH Live Chat அல்லது மலேசியா ஏர்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையம் வழியாக கூடுதல் கட்டணமின்றி அதே வழித்தடத்திற்கான பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம்.






