ஜப்பானில் சூறாவளி 'பாவி' சீற்றம்; தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

11 ஜூலை 2026, 4:54 AM
ஜப்பானில் சூறாவளி 'பாவி' சீற்றம்; தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

இஷிகாக்கி, ஜூலை 11 - சனிக்கிழமையன்று ஜப்பானின் தெற்கு சகிஷிமா (Sakishima) தீவு கூட்டத்தை சூறாவளி பாவி(Bavi), கனமழை மற்றும் பலத்த காற்றுடன் தாக்கியது.

இச்சூறாவளி தைவானை நோக்கி நகர்ந்து வருவதால், வெள்ளம் , நிலச்சரிவு பேரிடர் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஓகினாவா (Okinawa) மாகாணத்தின் ஒரு பகுதியான இஷிகாக்கி தீவில், வெறிச்சோடிய வீதிகளில் சிறிய இடிபாடுகள் பறப்பதைக் காண முடிந்தது. பலத்த காற்று மற்றும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு சில வாகனங்கள் மட்டுமே வீதிகளில் சென்றன.

மணிக்கு 144 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய இந்த பெரிய , சக்திவாய்ந்த புயலால், துறைமுகத்தில் இருந்த படகுகள் பலத்த அலைகளால் தூக்கி வீசப்பட்டன.

பிரபல சுற்றுலாத் தலமான இஷிகாக்கி முழுவதும் சனிக்கிழமை முழுவதும் விமானங்கள் மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டன.

விமான நிறுவனங்கள் 345 விமானச் சேவைகளை ரத்து செய்தன.

மேலும் ஓகினாவாவில் 24,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அண்டை நாடான தைவானில், பாவி புயல் வடக்கே நெருங்கி வருவதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் 14,000 க்கும் மேற்பட்ட மக்களை அரசாங்கம் வெளியேற்றியது.

இச்சூறாவளி படிப்படியாக பலவீனமடைந்து வருவதால் தைவானில் தரையிறங்காது என்றாலும், சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகளைத் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தைவானில் 920 அனைத்துலக விமானங்களும், 280 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

தைவான் முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் சனிக்கிழமையன்று சூறாவளி விடுமுறை அறிவித்து, வார இறுதியில் திறந்திருக்கக்கூடிய அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூடின.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.