தைவான், ஆகஸ்ட் 13 - இன்று தென்கிழக்கு தைவானில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகம் கொண்ட 'பொடுல்' சூறாவளி கரையைக் கடந்தது.
இந்த சூறாவளியால் கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசியது.
அதன் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டன. பாதுகாப்பிற்காக, சுமார் 5,500-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மிதமான வலிமை கொண்ட 'பொடுல்' புயல் மணிக்கு 191 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் தென் கிழக்குப் பகுதியிலுள்ள தைத்துங் நகரை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால், தெற்கு பகுதியின் பெருநகரங்களான கௌசியுங் மற்றும் தைனான் உட்பட ஒன்பது நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பணி இடங்களும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இச்சூறாவளி வார இறுதியில் சீனாவின் தெற்கு மாகாணமான ஃபுஜியன் நோக்கிச் செல்வதற்கு முன்பு தைவானின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா


