சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியிலிருந்து அனைத்து மலேசியர்களும் தாயகம் திரும்பினர்

13 மார்ச் 2026, 3:00 AM
சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியிலிருந்து அனைத்து மலேசியர்களும் தாயகம் திரும்பினர்

கோலாலம்பூர், மார்ச் 13: மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த மலேசியர்களைத் தாயகம் அழைத்து வரும் 'மீட்பு நடவடிக்கை' (Operasi Evakuasi) முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் விளைவாக, தற்போது சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் எந்தவொரு மலேசியரும் சிக்கியிருக்கவில்லை எனத் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெட்டாவிலுள்ள மலேசியத் தூதரகம் (KJM Jeddah) வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கடந்த சில நாட்களாக ஜெட்டாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் அங்கிருந்த மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை தற்போது சீராகி வருவதாலும், பெரும்பாலான விமானச் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாலும், தூதரகத்தால் 24 மணி நேரமும் இயங்கி வந்த அவசர காலக் கட்டுப்பாட்டு அறை தற்போது மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சவூதி அரேபியாவில் உள்ள மலேசியர்களுக்கு ஏதேனும் தூதரக உதவிகள் தேவைப்பட்டால், வழக்கம் போல் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, சவூதி அரேபியாவில் உம்ரா பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் கத்தார், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்த 163 மலேசியர்கள் சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

மலேசியா ஏர்லைன்ஸின் MH8503 சிறப்பு மீட்பு விமானத்தில் மலேசியர்களுடன் சேர்த்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களான தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஏழு வெளிநாட்டவர்களும் அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று, கத்தாரின் தோஹாவிலிருந்து மேலும் 179 மலேசியர்கள் பாதுகாப்பாகக் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தை (KLIA) வந்தடைந்தனர். இவர்களில் 59 பேர் அங்குச் சிக்கித் தவித்தவர்கள் என்றும், மற்றவர்கள் சொந்தமாக விமானப் பயணச்சீட்டு வாங்கி நாடு திரும்பியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மலேசிய மீட்பு விமானத்தைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் நாடுகளுக்குச் செல்வதற்காகக் கோலாலம்பூர் வழியாகப் பயணித்துள்ளனர்.

மேற்கு ஆசியாவில் திடீரென வான் எல்லைகள் மூடப்பட்டதாலும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும் நிலவிய இக்கட்டான சூழலில், மலேசிய அரசாங்கம் மேற்கொண்ட இந்தத் துரித நடவடிக்கை மலேசியர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.