மலாக்கா, ஜூலை 9: மலாக்கா, செமாபோக் பகுதியின் அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் ரோந்து வாகனத்தின் (MPV) மீது மதுபோதையில் காரை ஓட்டி வந்து மோதிய 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 6.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, கண்டாங் மற்றும் தியாங் டுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயம் ரோந்து வாகனத்தின் அவசரக் கால எச்சரிக்கை விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்த போதிலும், பின்னால் வந்த அந்த கார் எதிர்பாராதவிதமாக ரோந்து வாகனத்தின் வலது பக்கப் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை; இரு வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன.
விபத்தை ஏற்படுத்திய அந்த ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.
அவரது சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 45A(1)-இன் கீழ் மேல் விசாரணைக்கு உதவ அந்தச் சந்தேக நபர் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.







