சிப்பாங், ஜூன் 16 – நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் பயனடையும் வகையில் 14 பள்ளிகளில் 'பாதுகாப்பான பள்ளி மண்டலம்' (Safe School Zone) எனும் முன்னோடித் திட்டத்தை மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றம் (MKJR) தொடங்கவுள்ளது.
அண்மையக்காலமாகப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய பல மரண விபத்துகள் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், பள்ளிப் பகுதிகளில் ஆண்டுக்குச் சராசரியாக 70 விபத்துகள் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் 62-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன்னதாக ஆற்றிய உரையில் அவர், "பள்ளிப் பகுதிகளில் வாகனங்களின் வேகம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேலாண்மை ஆகியவை இன்னும் திருப்திகரமான அளவை எட்டவில்லை என்பதை இந்த விபத்து புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன," என்றார்.
"இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், பள்ளிப் பகுதிகளில் வாகனங்களின் வேக வரம்பைக் குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்காக, பாதசாரிகளுக்கான சிக்னல் விளக்குக் கடவைகள் (Pedestrian light-controlled crossings) மற்றும் சாலைத் தடுப்புகள் (Medians) போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
குறிப்பாக, கூட்டரசு சாலைகளின் (Federal Roads) ஓரத்திலோ அல்லது அவற்றிற்கு எதிரிலோ அமைந்துள்ள அதிக விபத்து அபாயமுள்ள பள்ளிகளை அடையாளம் காண கல்வி அமைச்சு மற்றும் ஒவ்வொரு மாநிலக் கல்வித் துறைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்," என்று கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் இந்தத் திட்டம் மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.
ஒரு பள்ளியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சுமார் 300,000 ரிங்கிட் நிதி தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தனியார் நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் இப்பள்ளிகளைத் தத்தெடுத்து நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், குறிப்பிட்ட பகுதிகளில் சாலைப் பயனாளிகளின் சட்ட விதிமுறை இணக்கம் மற்றும் அவர்களின் நடத்தை மாற்றங்களை அளவிடும் 'சாலைப் பாதுகாப்பு குறியீட்டை' (Road Safety Index) உருவாக்கும் பணியில் மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றம் (MKJR) தலைமை தாங்கிச் செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.
"சாலைப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு, தரவுகளின் (Data) அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும். இதுவரை, சாலை மரணங்களின் எண்ணிக்கையை மட்டுமே நாம் முதன்மை அடையாளக் காட்டியாகக் கொண்டு செயல்பட்டு வந்தோம்.
ஆனால், அது இறுதி முடிவு மட்டுமே. நமக்கு இப்போது மிகவும் விவேகமான அணுகுமுறை தேவை. ஆபத்து நிலைகள், சாலை அமைப்பின் பலவீனங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறியும் புதிய அணுகுமுறை நமக்குத் தேவை," என்று அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.







