வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் வணிகச் சூழல் சீராக உள்ளது: நாடாளுமன்றத்தில் விளக்கம்

25 ஜூன் 2026, 6:15 AM
வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் வணிகச் சூழல் சீராக உள்ளது: நாடாளுமன்றத்தில் விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 25: மலேசியாவின் வேலைவாய்ப்புச் சந்தையும் வணிகச் சூழலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் கட்டுப்பாட்டிற்குள் இருந்துள்ளதாகப் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் வேலை இழப்புப் போக்கு தற்போது நிர்வகிக்கக்கூடிய அளவில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஜூன் 22-ஆம் தேதி நிலவரப்படி வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 6,197 ஆகப் பதிவாகியுள்ளது என்றார். இது மலேசியாவின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் தொகையில் வெறும் 0.04 சதவீதத்தை மட்டுமே குறிக்கிறது.

"இந்த எண்ணிக்கையானது, கடந்த மே 2026-இல் வேலை இழந்த 7,766 பேருடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்," என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தி 17.33 மில்லியனாக அதிகரித்துள்ள வேளையில், வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16.82 மில்லியனாக உயர்ந்துள்ளது.

"தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour force participation rate) முந்தைய மாதத்தைப் போலவே 70.9 சதவீதத்தில் மாற்றமின்றித் தொடர்கிறது. இது தற்போதைய பொருளாதார நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் விவரித்தார்.

அதே வேளையில், நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்த 2.9 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 3 சதவீதமாகச் சற்று உயர்ந்துள்ளது. இதனால் 511.8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இது முழு வேலைவாய்ப்பு நிலைக்கான 4 சதவீத வரம்பிற்குள் தான் இன்னும் நீடிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வேலை இழந்தவர்களுக்கான மறுவேலைவாய்ப்புத் திட்டம் (Job redeployment) சாதகமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்றும், 'மைபியூச்சர்ஜாப்ஸ்' (MYFutureJobs) தளம் மூலமான வேலைவாய்ப்புப் பதிவுகள் கடந்த ஏப்ரலில் 12,119 ஆக இருந்த நிலையில், ஜூன் 12 நிலவரப்படி 18,756 ஆக (55 சதவீதம்) அதிகரித்துள்ளது.

"இதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் இதுவரை வழங்கப்பட்ட ஒட்டுமொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 62,644 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையில் மைபியூச்சர்ஜாப்ஸ் இணையப்பக்கம் மற்றும் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறையின் (SIP/EIS) கீழ் பயனடைந்தவர்களும் அடங்குவர்," என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தற்காலிக ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீண்டும் மிக விரைவாக வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைவதற்கும் பெரிதும் உதவுகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.