ஒட்டாவா, ஜனவரி 22 - கனடாவில் டிக் டாக் செயலியின் வணிகச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவை அந்நாட்டுக் கூட்டரசு நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
இதன் மூலம், புகழ்பெற்ற இந்த குறுங்காணொளி செயலி கனடாவில் தொடர்ந்து இயங்குவதற்கு தற்காலிக அனுமதி கிடைத்துள்ளதோடு, இது குறித்த வழக்கை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி டிக் டாக் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளைக் கலைக்க கனடிய தொழில் அமைச்சகம் உத்தரவிட்டது.
இருப்பினும், பயனர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கோ அல்லது உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கோ அரசாங்கம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் மாதந்தோறும் சுமார் 14 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள டிக் டாக் நிறுவனம், அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள டிக் டாக் நிறுவனம், அமைச்சர் மெலனி ஜோலியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தொழில் அமைச்சகமும், புதிய தேசிய பாதுகாப்பு ஆய்வை அமைச்சர் தொடர்வார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க வரிகளால் கனடியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட 'பைட்-டான்ஸ்' (ByteDance) நிறுவனத்திற்குச் சொந்தமான டிக் டாக் செயலி, பயனர்களின் தரவுகளைத் திருட வாய்ப்புள்ளதாகப் பல நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கனடிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிக் டாக் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய சட்ட ரீதியான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.



