ஷா ஆலாம், ஜூலை 5 - அன்று கைபேசிகள் வெறும் அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
இன்று கட்டணங்களைச் செலுத்துவது, போக்குவரத்து முன்பதிவு செய்வது, உணவு வாங்குவது முதல் அரசுத் துறை சார்ந்த பணிகள் வரை, அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையும் திறன்பேசி (Smart phone) திரையைத் தொடுவதன் மூலமே சாத்தியமாகிறது.
தொழில்நுட்பத்தோடு வளர்ந்த இளைய தலைமுறையினருக்கு இந்த மாற்றம் எளிதாக இருக்கலாம். ஆனால், இணையம் மற்றும் டிஜிட்டல் செயலிகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் தங்களின் பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த முதியவர்களுக்கு, இந்த மாற்றம் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
அப்படியிருந்தும், கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. டிஜிட்டல் மயமாகி வரும் உலகில் தங்களை எப்போதும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள, அதிகமான முதியவர்கள் தங்களது நேரத்தைச் செலவழித்து திறன்பேசி வகுப்புகளில் கலந்துக் கொள்ள முன்வருகின்றனர்.
இந்தக் காட்சியினை, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் (MBPJ) கீழ் புக்கிட் காசிங் (Bukit Gasing) சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வரும் திறன்பேசி வகுப்புகள் மூலம் காண முடிகிறது.
MBPJ சமூகக் கூடத்திற்குள் (Balairaya MBPJ) நுழைந்த உடனே, பல்லினத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தங்களது பயிற்சியாளர்களிடம் இடைவிடாது பல்வேறு கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கும் உற்சாகமான சத்தம் அங்கே எதிரொலிப்பதைக் கேட்க முடிகிறது.
முதியவர்களுக்குக் கற்பிக்கும் முறை இளைய தலைமுறையினருக்குக் கற்பிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில்,முதியவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எளிதில் மறந்துவிடும் குணம் கொண்டவர்கள். எனவே, அவர்கள் நினைவில் கொள்ளும் வரை ஒவ்வொரு வாரமும் தான் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கற்பிக்க வேண்டியுள்ளதாக பயிற்சியாளர் அமான் பானோட் (Aman Banot) 'மீடியா சிலாங்கூர்' (Media Selangor) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆரம்ப கட்டத்தில், இந்த வகுப்புகள் குறிப்பிட்ட பாடத்திட்டம் ஏதுமின்றி, பங்கேற்பாளர்களின் தேவைக்கு ஏற்ப மிகவும் சாதாரணமாகவே நடத்தப்பட்டன. தற்போது, இந்தத் திட்டம் படிப்படியாக வளர்ந்து, திறன்பேசியின் அடிப்படை பயன்பாடுகள், டிஜிட்டல் கட்டண முறைகள், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் இ-ஹெய்லிங் (e-hailing) வாகன முன்பதிவுச் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய முறையான பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
அன்றாடப் பணிகளுக்கு டிஜிட்டல் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், முதியவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து வாழாமல் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய முயற்சிகள் மிக அவசியமானவை ஆகும்.
இந்த வகுப்பில் பங்கேற்று வருபவர்களில் ஒருவர் 76 வயது சண்முகரத்தினம் எஸ்.செல்லத்துரை . இந்த வகுப்பிற்கு வந்த பிறகு அன்றாடப் பணிகளுக்காகத் தனது பிள்ளைகளை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் தற்போது தனக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்றார்.
இதற்கு முன்பு பணப் பரிவர்த்தனைகள் போன்ற தேவைகளுக்கு நான் என் பிள்ளைகளையே நம்பியிருந்தேன். இன்னும் முழுமையாகக் கற்றுக்கொண்டு வரும் நிலையிலும், இப்போது என்னால் சொந்தமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடிகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மற்றொரு பங்கேற்பாளரான 96 வயதான காங் யோக் லும் (Kong Yoke Lum) இந்த வகுப்பு வெறும் ஓய்வு நேரப் பொழுதுபோக்கு அல்ல. தங்களது பிள்ளைகள் தங்களுடன் வசிக்காத சூழலில், தனித்து மற்றும் சுயசார்போடு வாழ்வதற்குத் தேவையான ஒரு முக்கிய வாழ்வாதாரக் கல்வியாகும் எனக் குறிப்பிட்டார்.
மூன்று வருடங்களாக இந்த வகுப்பில் பங்கேற்று வரும் இவர், தற்போது 'கிராப்' (Grab) செயலி மூலம் தனக்கான வாகனம் மற்றும் உணவைச் சொந்தமாக ஆர்டர் செய்கிறார். மேலும், அன்றாடத் தேவைகளுக்கு 'வேஸ்' (Waze) வரைபடம் மற்றும் மொழிபெயர்ப்புச் செயலிகளையும் திறம்படப் பயன்படுத்துகிறார்.
"எனக்குத் தேவையான முக்கியமான செயலிகளான Waze, Grab மற்றும் Translator-மொழி பெயர்ப்பு போன்றவற்றை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன். ஏனெனில் பெரும்பாலான அதிகாரப்பூர்வப் பணிகள் மலாய் மொழியிலேயே இருக்கின்றன," என்று அவர் கூறினார்.

பொறுமை, தொடர்ச்சியான வழிகாட்டல் மற்றும் சரியான கற்பித்தல் அணுகுமுறை இருந்தால், முதியவர்களாலும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த வகுப்புகள் நிரூபிக்கின்றன.
இதன் மூலம் இந்த டிஜிட்டல் உலகில் அவர்களும் தன்னம்பிக்கையுடனும் சுயசார்புடனும் வாழ வழிவகை செய்யப்படுகிறது.








