ஷா ஆலாம், ஜூலை 4: பண்டார் புக்கிட் மக்கோத்தா செராஸ் மற்றும் சுங்கை லோங் ஆகிய பகுதிகளில், குப்பைகள் மற்றும் எண்ணெய் கழிவுகளால் கால்வாய்கள் நிரம்பி வழிவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும்.
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாம் இப்பகுதிகளுக்குப் பலமுறை நேரில் சென்று ஆய்வு நடத்திய போதிலும், அதே பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தாம் மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றது முதல் இப்பகுதியின் தூய்மைக்கேட்டைச் சரிசெய்ய முயன்றும், கால்வாய்கள் குப்பைகள், அசுத்த நீர் மற்றும் எண்ணெய் கழிவுகள் தேங்குவது மாறவில்லை என அவர் ஊடகங்களிடம் கூறினார்.
இந்த மோசமான சூழல், அப்பகுதியின் தூய்மையைக் கெடுப்பது மட்டுமன்றி, சாக்கடைகளை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதால், ஒவ்வொரு தூய்மைப் பணிக்கும் ஆயிரக்கணக்கான ரிங்கிட் செலவாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கக் கோரி, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் தாம் அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக டேவிட் சியோங் தெரிவித்தார்.
ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தம்மால் குறைகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே முடியும் என்றும், இதற்கான நிரந்தரத் தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின் கூட்டு ஒத்துழைப்பில்தான் உள்ளது என அவர் தெளிவுபடுத்தினார்.







