காஜாங், ஜூன் 16 – நேற்று காஜாங் தாமான் செபாகாட் இன்டா பகுதியில் உள்ள ஸ்ரீ லாவெண்டர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.
நேற்று காலை 7.12 மணியளவில் MERS 999 அவசர அழைப்பின் மூலம் தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ அதிகாரி, சிறுவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதோடு 2001 சிறார் சட்டம், செக்ஷன் 31(1)(a) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM50,000 வரை அபராதம், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.







