ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய உள்ளடக்கிய ஒப்பந்தத்திற்கு மலேசியா வலியுறுத்தல் - பிரதமர்

25 மே 2026, 3:56 AM
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய உள்ளடக்கிய ஒப்பந்தத்திற்கு மலேசியா வலியுறுத்தல் - பிரதமர்

கோலாலம்பூர், மே 25: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தற்போதைய போர்நிறுத்தத்தை வலுப் படுத்துவதற்கும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தை எட்டுமாறு மலேசியா வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு நலன்களையும் இந்த ஒப்பந்தம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உட்பட அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகள் முற்போக்கான பாதையில் நகர்ந்து வருவதாக, மத்திய கிழக்குத் தலைவர்களிடமிருந்து மலேசியாவுக்குச் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

"இந்த வளர்ச்சியை நான் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கிறேன். இந்தச் செயல்முறைக்கு வசதியாகப் பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கை மலேசியா பாராட்டுகிறது.

"பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டும் முயற்சிகளில் அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஈடுபாட்டையும் நாங்கள் வரவேற்கிறோம். அனைத்துத் தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வெற்றிகரமான தீர்வை எட்டும் வரை பேச்சுவார்த்தைகளைத் தொடருவார்கள் என நம்புகிறோம்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உட்பட ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் வரையப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சமூக வலைத்தள பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மத்திய கிழக்கில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்களிக்கக் கூடிய எந்த ஒரு பலதரப்பு முயற்சிகளையும் ஆதரிக்க மலேசியா தயாராக இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

ஒப்பந்த வரைவு குறித்து அறிந்த அமெரிக்க அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, அமெரிக்காவும் ஈரானும் தற்போது 60 நாள் போர்நிறுத்த நீட்டிப்பில் கையெழுத்திட நெருங்கியுள்ளன. இது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஈரான் தனது எண்ணெய் விற்பனையை மீண்டும் தொடங்க முடியும் என்பதோடு, தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கும் இது வழியமைக்கும்.

இன்னும் இறுதி செய்யப்படாத இந்தப் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப் படலாம் என ஆக்ஸிஸ் செய்திப் போர்ட்டலை மேற்கோள்காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.