குவா மூசாங், ஜூன் 30: கிளந்தானின் குவா மூசாங் மாவட்டத்திலுள்ள கம்போங் பாத்து பாப்பான் (Kampung Batu Papan) பகுதியில், ஆடு ஒன்றை விழுங்கிய 100 கிலோவிற்கும் அதிக எடையைக் கொண்ட மலைப்பாம்பை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM) வெற்றிகரமாகப் பிடித்தனர்.
சுமார் 4.57 மீட்டர் நீளமுடைய அந்த ராட்சத ஊர்வன வகை உயிரினம், அங்குள்ள ஆட்டுத் தொழுவத்திற்குள் இருந்தபோது பிடிபட்டது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த மலைப்பாம்பு ஆட்டை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் தொழுவத்திற்குள்ளேயே சுருண்டு கிடந்துள்ளது.
மீட்புக் குழுவினர் சமயோசிதமாகச் செயல்பட்டு வெறும் 10 நிமிடங்களிலேயே அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். பிடிபட்ட அந்த மலைப்பாம்பு, மேல் நடவடிக்கைக்காகத் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் (Perhilitan) ஒப்படைக்கப்பட்டுள்ளது.







