காரகாஸ், ஜூன் 26: வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட இரண்டு அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ள வேளையில், 971-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சுமார் 30 முறை அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் அரசாங்கம் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து வருவதாகக் கூறிய ரோட்ரிக்ஸ், மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தனியார் துறையினரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதன் அதிர்வுகள் அண்டை நாடுகளிலும் பலமாக உணரப்பட்டுள்ளன. குறிப்பாக, வெனிசுலாவின் தலைநகரான காரகாஸிலிருந்து சுமார் 1,700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரேசில் நாட்டின் பல நகரங்கள் வரை இந்த அதிர்வுகள் நீடித்ததால், அங்கிருந்த உயரமான கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.








