ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — சிலாங்கூரில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) திட்டங்களை, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொழில்துறை வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் தொழில்துறைகளுக்குத் தேவையான திறன்களுடன் உள்ளூர் இளைஞர்களை உருவாக்க முடியும். மேலும், அவர்களுக்கு தங்களது சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.
அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான திறன் வாய்ந்த உள்ளூர் பணியாளர்களை உருவாக்குவதன் மூலம், சிலாங்கூர் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜோப்கேர் சிலாங்கூர் மற்றும் மெகா ஜோப்கேர் சிலாங்கூர் ஆகிய திட்டங்கள் மூலம் TVET பட்டதாரிகளுக்கு வேலை வழங்குநர்களுடனான நேரடி நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் TVET பட்டதாரிகள் பயிற்சியை நிறைவு செய்தவுடன் நேரடியாக வேலைவாய்ப்பில் இணைய முடியும் என அவர் கூறினார்.
பல துறைகளில் தொழில்நுட்பத் திறன் கொண்ட பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது TVET கல்வியின் முக்கியத்துவத்தையும் அதற்கான வலுவான வேலைவாய்ப்பு சந்தையையும் எடுத்துக்காட்டுவதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.







