சீனா, 25 ஜூன்: சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்று வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி, ஹெனான் மாநிலத்தின் லுவோஹே (Luohe) நகரில் அமைந்துள்ள லுவோஹே மிருகக்காட்சி சாலை, கருப்பு கரடி வேடமணிந்து பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான பணியாளர் அறிவிப்பை வெளியிட்டது.
இப்பணிக்கான ஓராண்டுச் சம்பளம் சுமார் 61,000 மலேசிய ரிங்கிட் (100,000 Yuan) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விளம்பரத்தின்படி, “இது பூங்காவிலேயே மிகவும் சுதந்திரமானதொரு வேலையாகும். சோர்வாக இருந்தால் படுத்து ஓய்வெடுக்கலாம்; உற்சாகமாக இருந்தால் குதிக்கலாம், ஆடலாம், மரத்தில் ஏறலாம் அல்லது மீன் பிடிக்கலாம். உங்களுக்கு எப்படி வசதியாக இருக்கிறதோ, அப்படியே செய்யுங்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், உடல் தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும். மேலும் வேலை நேரம் தினசரி 6 மணி நேரம் மட்டுமே; மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரடி வேடமணியும் பணியாளர்கள் பார்வையாளர்களுடன் பேசக் கூடாது. அவசர காலங்களில் மட்டுமே பேச அனுமதி உண்டு. மற்ற நேரங்களில் கரடி போல சத்தம் எழுப்பிச் செயல்பட வேண்டும். மேலும், பார்வையாளர்கள் வழங்கும் சிற்றுண்டிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாகவும், அனைத்து காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரம்பிவிட்டதாகவும் மிருகக் காட்சி சாலையின் நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், சமூகலைத்தளங்களில் பிரபலமடைந்தால், அடிப்படைச் சம்பளத்தைவிட அதிக வருமானம் ஈட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான வேலைவாய்ப்பு குறித்து இணையவாசிகள் பலரும் நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.







