செராஸ், பிப் 6 - மலேசிய-சீனா இளைஞர்களிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில்பயிற்சி (திவேட்) ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தொடர் முயற்சியாக, BELIA MAHIR ஏற்பாட்டில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆதரவோடு மீண்டும் தொடர்கின்றது 2.0 மலேசியா-சீனா இளைஞர் திவேட் பயிற்சித் திட்டம்.
அரசாங்கம் வழங்கிய 29 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 500 மாணவர்களை உட்படுத்தி, கடந்தாண்டு MCYTT 1.0 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் அதே நிதி ஒதுக்கீட்டில் மேலும் 500 இந்திய மாணவர்களைக் கொண்டு MCYTT 2.0 திட்டம் தொடர்வதாக, மித்ராவின் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி கூறினார்.
இந்திய இளைஞர்கள், குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் அனைத்துலக தொழில்துறை பயிற்சியில் பங்கேற்கவும், உலகளாவிய திறன் அங்கீகாரத்தைப் பெறவும் இத்திட்டம் வாய்ப்பளிப்பதாகப் பிரபாகரன் கணபதி தெரிவித்தார்.
இப்பயிற்சி திட்டத்திற்கான சான்றிதழ் சீனா அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படுவதால், அது இளைஞர்களின் கல்வி தகுதியை உயர்த்தி, வேலை வாய்ப்பைப் பெறுவதைக் எளிதாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதனிடையே, 12 வகையான திறன் கல்வியை உட்படுத்தி இரண்டு வாரங்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.


