ஷா ஆலாம், செப் 17 - நூற்றுக்கணக்கான வேலை விண்ணப்பங்களை அனுப்பியும் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லையா ?
அப்படியென்றால் , நீங்கள் அனுப்பிய சுயவிபரக் குறிப்பில் ( ரெஸ்யூமி - Resume) தான் பலவீனம் உள்ளது என்கிறார் Pakar Resume நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சரளாதேவி.
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்,அனுபவம், தகுதி ஆகியவற்றுக்கு ஏற்ப ரெஸ்யூமி இருப்பது அவசியம்.
அதோடு, வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் , நிறுவனங்கள் பயன்படுத்தும் Applicant Tracking System (ATS) எனப்படும் வேலை விண்ணப்பங்களை சுலபமாக வடிகட்டும் தொழில்நுட்ப முறையையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகுமென்கிறார் சரளாதேவி.
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் மனிதர்கள் படிப்பதற்கு முன்பாகவே, இந்த மென்பொருளைக் கொண்டுதான் தகுதியான ரெஸ்யூம்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
உங்கள் ரெஸ்யூமில் சரியான வார்த்தைகள் (Keywords) அல்லது எளிமையான வடிவமைப்பு (Formatting) இல்லை என்றால், அது மென்பொருளால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
“LinkedIn, JobStreet போன்ற வேலைவாய்ப்பு தளங்களிலும் இந்த விண்ணப்பத் தேர்வு முறையே பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் அனுப்பும் ரெஸ்யூமியை ATS வாசித்து, நிறுவனத்தின் வேலைக்கான தேவைகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடும்,” என்று மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய நேர்காணலில் சரளாதேவி தெரிவித்தார்.
விண்ணப்பத்தாரரின் ரெஸ்யூமி வேலைக்கான தேவைகளுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதன் அடிப்படையில் அதன் மதிப்பீடு அமையும் .
“அதிகப் பொருத்தத்தைக் கொண்ட ரெஸ்யூமிக்கள் அடுத்தகட்டமாக முதலாளியின் கவனத்துக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெறும்.
“அதேவேளை, வேலைக்கான தேவைகளுடன் குறைந்த அளவில் பொருந்தும் சுயவிவரங்கள் ஆரம்ப கட்டத்திலே நிராகரிக்கப்படலாம் ” என்றார்.
இதனால், வேலை தேடுபவர்கள் ஒரே ரெஸ்யூமை அனைத்து வேலை விண்ணப்பத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப அதனை மாற்றியமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“முதலில் விண்ணப்பிக்க விரும்பும் வேலைக்கான வேலை விவரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும்.
“அதன் மூலம் நிறுவனம் எதிர்பார்க்கும் திறன்கள், அனுபவம், துறைசார் அறிவு மற்றும் பிற தகுதிகளை அடையாளம் காண முடியும்.
“பின்னர், அந்த வேலைக்குத் தேவையான அம்சங்கள் தங்களது ரெஸ்யூமில் தெளிவாக இடம்பெறுவதை உறுதி செய்து, அதற்கேற்ப ரெஸ்யூமை மாற்றி அமைக்க வேண்டும்,” என்றார்.
எனவே, வேலை தேடுபவர்கள் எண்ணிக்கையளவில் அதிகமான வேலைகளுக்கு ஒரே ரெஸ்யூமை அனுப்புவதைக் காட்டிலும், தாங்கள் விண்ணப்பிக்கும் வேலையின் தேவையைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதற்கேற்ப மாற்றியமைப்பது முக்கியம் என சரளாதேவி குறிப்பிட்டார்.







