இஸ்தான்புல், ஜூலை 19 : தெற்கு ஈரானின் ஹொர்மொஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 116 தொலைத்தொடர்பு கோபுரங்களின் (Telecommunication Towers) செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அப்பகுதிக்கான தரைவழித் தொலைபேசி, அலைபேசி மற்றும் இணையச் சேவைகள் (Internet) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய இந்தத் தீவிரத் தாக்குதலானது, மாகாணத்தின் தரவுப் போக்குவரத்து மற்றும் அலைக்கற்றை (Bandwidth) வழித்தடங்களைப் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளதாக ஹொர்மொஸ்கான் மாகாணத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொது இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்கட்டமைப்புச் சேதங்கள் காரணமாக, பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் ஹாஜியாபாத் (Hajiabad) ஆகிய நகரங்களின் வடக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பு வலைப்பின்னல்களை மறுசீரமைப்பு செய்து மீட்டெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளன .
இதற்காக ஹொர்மொஸ்கான் மற்றும் அதன் அண்டை மாகாணங்களிலிருந்தும் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் அவசரகாலச் செயல்பாட்டுக் குழுக்களும் சம்பவ இடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளன.







