20,000 ரிங்கிட்டிற்கும் குறைவான தேக்குன் நிதியுதவிக்கு 24 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்க இலக்கு

22 ஜூன் 2026, 5:10 AM
20,000 ரிங்கிட்டிற்கும் குறைவான தேக்குன் நிதியுதவிக்கு 24 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்க இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 22 - தேசிய தொழில்முனைவோர் பொருளாதார நிதிக்குழு அல்லது 'தேக்குன் நேஷனல்' (TEKUN Nasional) அமைப்பு, இனிவரும் காலங்களில் 20,000 ரிங்கிட்டிற்கும் குறைவான வணிக நிதியுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் (PMKS) தங்களின் வணிகத்திற்கான சுழற்சி மூலதனத்தை மிக விரைவாகப் பெற்று பயனடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த 24 மணி நேர நிதியுதவி ஒப்புதல் திட்டம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Projek Rintis) அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இது அதிகாரப்பூர்வமாக நாடு தழுவிய அளவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இத்தகைய விரைவானச் செயல்முறையின் மூலம், சிறு வணிகர்கள் மூலதன நிதியைப் பெறுவதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் உறுதியளித்தார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு (KUSKOP) புதிய 'தேக்குன் நேஷனல்' இணையப் பக்கத்தை (Portal TEKUN Nasional) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் தொழில்முனைவோர்கள் நிதியுதவி குறித்த விவரங்களைப் பெறவும், இணையம் வழி விண்ணப்பிக்கவும், பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் முடியும்.

மேலும், 100,000 ரிங்கிட் வரையிலான தேக்குன் நிதியுதவி விண்ணப்பங்கள் தற்போது 7 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும், அதே வேளையில் 'எஸ்எம்இ பேங்க்' (SME Bank) மற்றும் 'பேங்க் ராக்யாட்' (Bank Rakyat) ஆகிய வங்கிகள் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான நிதியுதவி விண்ணப்பங்களை 14 நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் வழங்க உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 180,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் 5 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இவ்வாண்டில் நாடு முழுவதிலும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 'பவர்அப்10கே' (PowerUp10k) திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ரிங்கிட் நிதியுதவியை விநியோகிக்க அமைச்சகம் இலக்குக் கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.