கோலாலம்பூர், நவ 4 — சமூக பாதுகாப்பு அமைப்பு (செக்சோ) தனது ``Employment Insurance Scheme`` (EIS) திட்டத்தை கிக் (gig) தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்தும் சாத்தியத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
“தற்போது, EIS திட்டம் கிக் தொழிலாளர்களை உள்ளடக்கவில்லை. ஆனால், நான் சமூக பாதுகாப்பு அமைப்பிற்கு இந்தத் திட்டத்தை அல்லது இதற்கு இணையான திட்டத்தை அவர்களுக்காக விரிவுபடுத்தும் சாத்தியத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் இன்று மக்களவையில் மனிதவள அமைச்சகத்துக்கான 2026 நிதி மசோதா விவாதத்தில் தெரிவித்தார்.
EIS என்பது சொக்சோ கீழ் இயங்கும் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இது வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுகிறது.
இதற்கிடையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை மொத்தம் 8,46,907 பேர் சொக்சோவின் சுயதொழில் சமூக பாதுகாப்புத் திட்டமான Lindung Kendiri-க்கு பங்களித்துள்ளனர் என ஸ்டீவன் தெரிவித்தார். இதில் 2,90,122 பேர் ஈ-ஹெய்லிங் (e-hailing) மற்றும் பி-ஹெய்லிங் (p-hailing) துறைகளை சேர்ந்தவர்கள்.
இந்தத் திட்டம் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ``Self-Employment Social Security Act`` அடிப்படையில் சுயதொழில் செய்பவர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
மலேசிய தொழிலாளர் சந்தை முழுமையாக சீரமைக்கப்படுவதற்கு அரசு உறுதியாக செயல்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்புடன் சமநிலை மற்றும் போட்டித்தன்மையுள்ள பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிசெய்யும் என்றார்.




