ஈப்போ, ஜூன் 21- பெர்ச்சாம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட ஐந்து மண்டலங்களை காவல்துறை மூடியுள்ளதுடன், அப்பகுதியில் திருட்டு அல்லது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்காக, நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இரவில் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நுழைய விரும்பும் குடியிருப்பாளர்களுக்குத் தளர்வு வழங்கப்படுமென ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ஏசிபி) முஹம்மது நஜிப் ஹம்ஸா இன்று, சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தை (PKTK) பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் 'Op Bencana' மூலம் போலீஸ் துறைக்கு 492 புகார்கள் கிடைத்ததாகவும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை வீசிய புயலில் பெர்ச்சாம் பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.







