ஷா ஆலம், ஜூன் 4 - சிலாங்கூர் மாநிலத்தின் மலிவு விலை வீடமைப்பு மேம்பாட்டு மாதிரி தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நேற்று, உஸ்பெகிஸ்தானின் பெர்கானா (Fergana) மாநிலப் பிரதிநிதிகள் புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள 'ரூமா இடாமான்' திட்டத்தை நேரில் பார்வையிட்டனர்.
பெர்கானா மாநில ஆளுநர் ஹெய்ருல்லோ போசோரோவ் (Hayrullo Bozorov) தலைமையிலான இக்குழுவில், துணை ஆளுநர் நூரிடின் மாமஜோனோவ் (Nuriddin Mamajonov) மற்றும் மலேசியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் டாக்டர் கரோமிடின் கடோயேவ் (Dr Karomiddin Gadoev) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (PNSB) தெரிவித்துள்ளது.
'ரூமா இடாமான் புக்கிட் ஜெலுத்தோங்' திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மலிவு விலை வீடமைப்பு மேம்பாட்டு அணுகுமுறை குறித்து இந்தப் பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும் என PNSB குறிப்பிட்டது.
மேலும், பொதுமக்களுக்குத் தரமான வீடுகளை வழங்குவதில் PNSB பின்பற்றும் மேம்பாட்டு அணுகுமுறைகள் குறித்தும் அந்தப் பிரதிநிதிகள் குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
"இந்த வருகை இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கமான உறவைப் பிரதிபலிப்பதோடு, வீடமைப்பு மேம்பாடு, நகரமைப்புத் திட்டம் மற்றும் நிலையான சமுதாய மேம்பாடு ஆகிய துறைகளில் கருத்துகளையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது," என்று அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், வீடமைப்பு மேம்பாட்டுக் கருத்துரு, அங்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் சிலாங்கூரில் சொந்த வீடு வாங்கும் திட்டங்களை ஆதரிக்கும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் அக்குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக PNSB மேலும் கூறியது.








